பார்வை இழந்தாலும், ஆயிரம் கண்ணுடையான்... மெக்கானிக் கண்ணப்பன்


கண்ணப்பன்... திருச்சி, உறையூர் காவல் நிலைய பகுதியில் பிரபலமான டூ வீலர் மெக்கானிக். மூலைக்கு மூலை மெக்கானிக் கடைகள் பெருகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில், கண்ணப்பனிடம் அப்படி என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? இருக்கிறது. சிறு வயதிலேயே கண் பார்வையை இழந்துவிட்ட கண்ணப்பன், பைக்கிலிருந்து வரும் சத்தத்தை வைத்தே அதிலிருக்கும் குறைகளையும், பழுதுகளையும் எளிதாக கண்டு பிடித்து சரி செய்து அசரடிக்கிறார்.
அத்தோடு, ஸ்பேனரை கையில் எடுத்தவுடன், அது என்ன நம்பர் என்பதையும் துல்லியமாக கண்டுபிடித்துவிடுகிறார். மேலும், கார்ப்பரேட்டர் கிளினீங் போன்ற வேலைகளை மிக லாவகமாக செய்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார். இப்படி பல விதங்களிலும் அசர வைக்கும் கண்ணப்பனின் மறுபக்கம்தான் நம்மை வேதனையில் ஆழ்த்துகிறது.
பறிபோன பார்வை
கண்ணப்பனுக்கு மூன்று வயதாக இருக்கும்போது மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அப்போதுதான் இவருக்கு கண்பார்வை பறிபோயுள்ளது. பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டதால், கண் பார்வை திரும்ப கிடைப்பது கடினம் என்று டாக்டர்கள் கை விரித்து விட்டதாக கூறுகிறார்.
விடா முயற்சி
பார்வை பறிபோனதால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. அதற்காக இவர் வீட்டிலேயே முடங்கிப் போய்விடவில்லை. ஏழ்மையான குடும்பப் பின்னணி கொண்ட கண்ணப்பன், தன் உழைப்பால் குடும்பத்தை காப்பாற்ற நினைத்து, முதலில் சைக்கிள் கடையில் சேர்ந்து பழுது நீக்கும் பயிற்சியை கற்றுக் கொண்டுள்ளார். அடுத்து டூ வீலர் மெக்கானிக் கடையில் சேர்ந்து பயற்சி பெற்றுள்ளார்.
பைக் மெக்கானிக்
ஓரிரு ஆண்டுகளில் நன்கு பயிற்சி பெற்ற அவர் நண்பர்கள் உதவியுடன், உறையூர் காவல் நிலையம் அருகில் தற்போது மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். கண்ணப்பனின் கைப்பக்குவத்தை கேட்டு பலர் வெளியூர்களிலிருந்தும் தேடி வந்து சர்வீஸ் செய்து செல்கின்றனர்.
நம்பிக்கை
27 வயதே ஆன இந்த இளைஞருக்கு மீண்டும் தனக்கு கண் பார்வை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அதற்குண்டான சிகிச்சைக்கு போதிய வழிகாட்டுதலும், பண வசதியும் இல்லாமல் இருந்து வருகிறார்.
ஏழ்மை நிலை
கண்ணப்பனின் தந்தை வாட்ச்மேனாக வேலை பார்க்கிறாராம். ஏழ்மையான குடும்ப சூழலில், மெக்கானிக் தொழிலில் வரும் வருமானம், குடும்பச் செலவுக்கு சரியாகிவிடுவதால், தனக்கு கண் சிகிச்சை குறித்து அவர் யோசிக்க முடியாத நிலையில் இருக்கிறார்.
இயலாமை
கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில் இரு ஆண்டுகளுக்கு முன் பரிசோதனைகள் செய்துள்ளனர். ஆனால், முழு பரிசோதனையையும் செய்ய இயலாமல் திரும்பி விட்டதாக தெரிவிக்கிறார் கண்ணப்பன். பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டதாக சில டாக்டர்கள் தெரிவித்தாலும், அதற்குண்டான முழுமையான கண் பரிசோதனை இதுவரை அவர் செய்யவில்லை என்று தெரிகிறது. அதற்கு இவரது பொருளாதாரம் இடம்கொடுக்கவில்லை. முழு கண் பரிசோதனை செய்தால் மட்டுமே அவருக்கு மீண்டும் கண் பார்வை கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறதா என்பது தெரியும்.
உங்கள் கையில்...
காசு, பணமாக கொடுப்பதைவிட அவருக்கு கண் பார்வை கொடுத்தால், அவரின் எதிர்காலம் நிச்சயம் பிரகாசமாக அமையும் என்பது திண்ணம். எனவே, எமது வாசகர்கள் எவரேனும் மருத்துவ துறையில் இருந்தாலோ அல்லது நல்லுள்ளம் கொண்ட எவரேனும் கண்ணப்பனுக்கு மீண்டும் பார்வை கிடைப்பதற்கான முயற்சியை செய்தாலோ, அதுவே இந்த செய்தியை பிரசுரித்தற்கான பலனாக அமையும்.
முன்னுதாரணம்




பார்வை இழந்தாலும் தனது தன்னம்பிக்கையாலும், சாதித்துக் காட்டும் திறனாலும் பலருக்கு முன்னுதாரணமாய் திகழ்கிறார் கண்ணப்பன். தனது சிகிச்சைக்கு உதவியை பிறரிடம் எதிர்பார்த்தாலும், தன்னிடம் இருக்கும் மெக்கானிக் தொழிலை தன் போன்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு கற்றுத் தரவும் ஆர்வமாக இருக்கிறார் கண்ணப்பன்.
Unknown Web Developer

No comments:

Post a Comment

see this